November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் தொடரின் போட்டி மத்தியதஸ்தர், நடுவர் குழாம் அறிவிப்பு

டிசம்பர் மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது ‘லங்கா பிரீமியர் லீக்’ (எல்.பி.எல்) தொடரின் போட்டி மத்தியதஸ்தர், போட்டி நடுவர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும் போட்டி நடுவர் குமார் தர்மசேன ஆகிய இருவரும் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இந்த ஆண்டு எல்பிஎல் தொடரில் தமது பங்களிப்பினை வழங்கவுள்ளனர்.

இம்முறை எல்பிஎல் தொடரில் ரஞ்சன் மடுகல்ல தலைமையிலான போட்டி மத்தியஸ்தர் குழாத்தில் கிரஹம் லப்ரோய், வென்டல் லப்ரோய் மற்றும் மனோஜ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மனோஜ் மெண்டிஸ் உள்ளூர் போட்டி மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இம்முறை எல்.பி.எல் தொடரில் குமார் தர்மசேன தலைமையிலான நடுவர் குழாத்தில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நடுவர் குழாத்தில் குமார் தர்மசேனவுடன் இணைந்து ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி, லின்டன் ஹன்னிபல், ப்ரகித் ரம்புக்வெல்ல ஆகிய சர்வதேச போட்டி நடுவர்களும் கடமையாற்றவிருக்கின்றனர்.

இவர்கள் தவிர இலங்கையின் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக செயற்படுகின்ற தீபால் குணவர்தன, ஹேமந்த பொதேஜு, கீர்த்தி பண்டார, அசங்க ஜயசூரிய, ரோஹித கொட்டஹச்சி மற்றும் ரவிந்திர கொட்டச்சி ஆகியோரும் இம்முறை எல்பிஎல் தொடரில் போட்டி நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

ஏல்பிஎல் தொடரில் பிரதான போட்டி நடுவர்களில் ஒருவராக இருக்கும் குமார் தர்மசேன 2012 ஆம், 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடுவருக்காக ஐ.சி.சி. வழங்கும் டேவிட் செப்பர்ட் விருதினை வென்றிருப்பதோடு 2015 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டி மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த டி20 உலகக் கிண்ணத்தில் கள நடுவராக செயல்பட்ட அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை ரஞ்சன் மடுகல்ல, மொத்தமாக ஐ.சி.சி. இன் எட்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்பிஎல் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல்  26 ஆம் திகதிவ வரையில் கொழும்பு மற்றும் ஹம்பந்தோட்டையில் நடைபெறவுள்ளது.