November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 6 பேருக்கு கொரோனா தொற்று

Photo: Twitter/Srilanka Cricket

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிம்பாப்வேயில் நடைபெற்று வந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்று மேற்கிந்திய தீவுகளை அணியுடனான 2ஆவது போட்டியில் விளையாடவிருந்தது.

எனினும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள ஆறு வீராங்கனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், இலங்கை மகளிர் அணி வீராங்கனைகளை ஹோட்டல்களில் தங்கவைப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் கொரோனா வைரஸ் அச்சத்தினை அடுத்து ஹராரே மைதானத்திற்குள் விளையாட வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மகளிர் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நாட்டிற்கு வருகை தந்த பிறகு சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தி அவர்களை தீவிர கண்கானிப்பின் கீழ் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.