
Photo: Twitter/ BCCI
நியூசிலாந்து அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை படைத்தார்.
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 16ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கான்பூரில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்மு விக்கெட்டுக்களையும் இழந்து 345 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 105 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதனிடையே, தனது அறிமுக போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், சதம் அடித்து முத்திரை பதித்ததுடன், அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 16ஆவது இந்திய வீரராகவும் இடம்பிடித்தார்.
இதற்குமுன், முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த 15 இந்திய வீரர்கள் பட்டியலில் லாலா அமர்நாத், தீபக்ஷோடான், அர்ஜுன் கிரிபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்திர அமர்நாத் (மொகீந்தர் அமர்நாத்தின் சகோதரர்), மொஹமட் அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷpகர் தவான், ரோகித் சர்மா, பிரிதிவி ஷா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, கான்பூரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1969ஆம் ஆண்டு குண்டப்பா விஸ்வநாத் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் 137 ஓட்டங்கள் எடுத்த பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் கான்பூரில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.