
Photo: Twitter/ Cricket Australia
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், அத்துடன், ஸ்டீவ் ஸ்மித்துக்கு உப தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது 65 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும்.
கடைசியாக கடந்த 1956ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் தலைவராக செயல்பட்டிருந்தார்.
அதன்பின் வேகப் பந்துவீச்சாளர் எவரும் தலைவராக நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த டிம் பெய்ன் பாலியல் சர்ச்சையில் சிக்கியதால் தாமாக முன்வந்து தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். மேலும், தற்காலிகமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகி இருப்தாகவும் டிம் பெய்ன் தெரிவித்துவிட்டதால், ஆஷஸ் தொடரிலும் விளையாடமாட்டார்.
இதையடுத்து, டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நடத்திய ஆலோசனையில் வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைவராகவும், ஸ்டீவ் ஸ்மித் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தலைவர் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உப தலைவர் பதவியை பெற்றுள்ளார்.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், ‘ அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன். டிம் பெய்ன் வழங்கிய அதே பொறுப்பான செயல்பாட்டை நானும் வழங்குவேன் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மட்டுமல்லாமல் ஒருநாள், டி-20 போட்டிகளுக்கும் ஏற்றார்போல் பாட் கம்மின்ஸ் அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 35 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கம்மின்ஸ் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.