இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் தான் கௌதம் கம்பீர். தற்போது இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், டெல்லியில் வசித்து வரும் கௌதம் கம்பீர் நேற்று காலை திடீரென டெல்லி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, தனக்கு மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அனுப்பியுள்ளது என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக கம்பீரின் இல்லத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினரை வரவழைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டுவிட்டரில் கம்பீர் வெளியிட்டிருந்த இரண்டு பதிவுகள் தான் தற்போது கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டர் பதிவொன்ளை போட்டிருந்த கம்பீர், முதலில் உங்களின் வீட்டில் இருந்து யாரையேனும் எல்லைக்கு அனுப்பிப் பாருங்கள், அதன்பிறகு தீவிரவாத நாட்டின் தலைவரை சகோதரர் என்றுக் கூறுவீர்களா என்று நான் பார்க்கிறேன் என சாடியிருந்தார்.
இதேபோல, பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை தலைவர் அபிநந்தனுக்கு சமீபத்தில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அப்போது அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது சகோதரர் இவர் என கம்பீர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு விடயங்கள் தான் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கு காரணம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.