July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பங்களாதேஷ் வீரர் திடீர் ஓய்வு

Photo: Twitter/ Bangladesh Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மஹ்முதுல்லாஹ் அறிவித்துள்ளார்

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர்களில் ஒருவராக விளங்கும் மஹ்முதுல்லாஹ், பங்களாதேஷ் டி-20 அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், மஹ்முதுல்லாஹ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் சபையும் உறுதி செய்துள்ளது.

இது குறித்து மஹ்முதுல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவது எளிதானது அல்ல. நான் எப்பொழுதும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனது டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.

நான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றாலும், இன்னும் ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன், மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எனது நாட்டிற்காக எனது சிறந்ததை தொடர்ந்து வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்முதுல்லா, 2,914 ஓட்டங்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 5 சதங்களும், 16 அரைச் சதங்களும் அடங்கும்

அத்துடன், ஆறு டெஸ்ட் போட்டிகளுக்கு பங்களாதேஷ் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.