July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

Photo: Sri Lanka Cricket

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி கடந்த 21 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸுக்காக 133.5 ஓவர்களை எதிர்கொண்டு 386 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதன்பிறகு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி  இலங்கை பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனால் 156 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின் 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த குரூமா போனர் – ஜோஸுவா டா சில்வா ஆகிய இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்ததுடன், இருவரும் அரைச்சதம் கடந்தும் அசத்தினர்.

எனினும் ஜோஸுவா டா சில்வா 54 ஓட்டங்களை பெற்றிருந்த போது, லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சிலும், அடுத்த வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 160 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அதிகபட்சமாக குரூமா போனர் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலின், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.