
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் மற்றும் ஐ.பி.எல், பி.எஸ்.எல் உள்ளிட்ட போட்டித் தொடர்களை நடத்த தயார் என துபாய் கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் மற்றும் ஐ.சி.சி டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்திய பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் மற்றும் பல ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு துபாய் கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள கலீஜ் டைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் துபாய் கிரிக்கெட் சபையின் தலைவர் அப்துல் ரஹ்மான் பலக்னாஸ் கூறும்போது,
அண்டை நாடான ஆசிய ஜாம்பவான்களுக்கு எங்கள் நாடு சரியான நடுநிலை இடமாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இங்கு நடைபெறுவதே சிறந்த விடயம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சார்ஜாவில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடத்தும்போது அது ஒரு போர் போல இருந்தது. ஆனால் அது ஒரு நல்ல போர். அது ஒரு விளையாட்டுப் போர் மற்றும் அது அருமையாக இருந்தது.
எனவே இதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். ஆண்டொன்றில் ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு வந்து விளையாடும்படி இந்தியாவை சமாதானப்படுத்தினால் அது அற்புதமாக இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை துபாயில் நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்காக பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது நண்பர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன். அவர்கள் பாகிஸ்தானுடன் விளையாட தயாராக இருந்தால், எங்கள் இடத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் எந்தவொரு இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை. ஆனால், ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.சி.சி நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.