July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்திய வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கவில்லை”; பி.சி.சி.ஐ மறுப்பு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பி.சி.சி.ஐ மறுத்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என இந்தியா முழுமையாக வென்றது

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி சாப்பிட பி.சி.சி.ஐ தடைவிதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதில் பன்றிக்கறி, மாட்டிறைச்சியை எந்தவிதமான உணவு வடிவிலும் உட்கொள்ளக்கூடாது. ஹலால் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என வீரர்களுக்கு பி.சி.சி.ஐ கட்டுப்பாடு விதித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் சமூக வலைத்தளங்களில் பி.சி.சி.ஐ.க்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், குறித்த சர்ச்சைக்கு பி.சி.சி.ஐ.யின் பொருளாளர் அருண் துமால் கருத்து தெரிவிக்கையில்,

வீரர்களின் உணவுக் குறிப்பு குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. உணவு தொடர்பாக எதையும் வீரர்களிடம் கட்டாயப்படுத்த மாட்டோம். உணவு குறித்து வீரர்களே தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துக் கொள்வார்கள். இதில் பி.சி.சி.ஐ தலையிடுவதில்லை. எந்த உணவைச் சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்பது அவர்களுடைய முடிவு என அவர் தெரிவித்தார்.