
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆரம்ப வீரர் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி வென்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான்ன முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இதற்கான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நியூசிலாந்து அணியுடனான டி-20 தொடரில், இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
எனவே, கேஎல் ராகுலுக்குப் பதிலாக, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே, சூர்யகுமார் யாதவுக்கு இறுதி பதினொருவர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமையும்.
இதேவேளை, நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராத் கோலி விளையாடாத காரணத்தினால் அணியை அஜிங்கியா ரஹானே வழிநடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.