July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி

இலங்கையில் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள எல்.பி.எல் தொடரில், மட்டுப்படுத்தப்பட்ட அளவு ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்படி, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை எல்.பி.எல் போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்குள் உள்வாங்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் ஒன்றுமில்லை. கிரிக்கெட்டின் ரசிகன் என்ற ரீதியில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை கருத்திற் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

எல்.பி.எல் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. இதில், நடைபெறவுள்ள 20 லீக் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஏனைய போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

எல்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதுடன், 24 ஆம் திகதி இறுதிப் போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.