July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – மே.தீவுகள் டெஸ்ட்: சுழல் பந்து வீச்சாளர்களினால் முன்னிலை பெற்ற இலங்கை

Photo: Sri Lanka Cricket

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 61 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்து வீசிய சுழல்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட போதும், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரின் அபார சுழல் பந்து வீச்சின் காரணமாக  ஆட்டநேர நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் கிரைக் பிராத்வைட்  அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, ஜேர்மைன் பிளக்வூட் 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி, ஆட்டம் நிறைவடையும் போது கெயல் மேயர்ஸ் 22 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.

எனவே, இலங்கை அணியானது, மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகிக்கின்றது.