Photo: Twitter/BCCI
சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரில் கர்நாடகா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகியது.
இந்தியாவில் நடைபெறுகின்ற பிரதான டி-20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணியும் கர்நாடகா அணியும் தகுதி பெற்றது.
இதன்படி, சம்பியனை தீர்மானிக்கும் இறுதிபோட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (22) நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கர்நாடகா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.
கர்நாடகா அணியில் அதிகபட்சமாக அபினவ் மனோகர் 46 ஓட்டங்களையும், பிரவீன் துபே 33 ஓட்டங்களையும் எடுத்தனர். தமிழ்நாடு அணியின் பந்துவீச்சில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஆரம்ப வீரர்களான ஜெகதீசன் 41 ஓட்டங்களையும், ஹரி நிஷாந்த் 23 ஓட்டங்களையும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய மத்திய வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தால் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் சாய் கிஷோர் முதல் நான்கு பந்தில் 8 ஓட்டங்களை எடுத்து கொடுத்ததன் மூலம் கடைசி ஒரு பந்திற்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இதன்படி, கடைசி பந்தை எதிர்கொண்ட சகலதுறை வீரர் ஷாருக்கான் மிரட்டல் சிக்ஸர் விளாசி தமிழ்நாடு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரில் அதிகமுறை சம்பியன் பட்டம் வென்ற அணி எனும் பெருமையையும் தமிழ்நாடு அணி பெற்றது.
15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ஓட்டங்கள் எடுத்த ஷாருக்கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.