November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜப்னா கிங்ஸ்’ அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹேமங் பதானி, ‘ஜப்னா கிங்ஸ்’ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் ‘ஜப்னா கிங்ஸ்’ அணி, முன்னணி பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை தமது அணியுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றது.

அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானியை அந்த அணியின் ஆலோசகராக இணைத்துக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண எல்.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்தியாவுக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 45 வயதான ஹேமங் பதானி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார்.

இதேவேளை, இவர் தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இதேவேளை, இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி செயல்படவுள்ளதுடன், உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மரியோ வில்லவராயன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.