July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

Photo: Twitter/BCCI

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் கடந்த 17ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்த போட்டியிலும் இந்தியா அபாரமாக செயல்பட்டு 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவதும், இறுதியுமான டி-20 போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் ரோகித் சர்மாவின் அபாரமான துடுப்பாட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 56 ஓட்டங்களை அதிகபட்சமாப் பெற்றுக்கொள்ள, நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர் மார்டின் கப்டில் மாத்திரம் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுக்களையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக கடந்த ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் இந்தியா (5–0) முழுமையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 25 ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகவுள்ளது.