photo: Sri Lanka Fottball
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பீபா) தலைவர் ஜியானி இன்பான்டீனோ அண்மையில் மேற்கொண்ட இலங்கைக்கான விஜயத்தின் போது அணிந்திருந்த சிங்கக் கொடியுடன் கூடிய முகக்கவசம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவர் அணிந்திருந்த முகக் கவனம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வெளியாகி இருந்த நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனம் அது தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பீபா’ தலைவர் இலங்கை மீதான மரியாதை மற்றும் அன்பின் காரணமாகவே இத்தகைய முகக்கவசத்தை அணிந்துள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்த போது சிங்கக் கொடியுடன் கூடிய முகக்கவசத்தை அணிந்திருந்தார்.
இச்சம்பவம் எந்தவொரு தரப்பினரையும் அல்லது தனிநபரையும் புண்படுத்தியிருந்தால் அல்லது சமூகத்தில் தவறான கருத்தை ஏற்படுத்தியிருந்தால் இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
இதனை அரசியல் அல்லது இனவாத பிரச்சினையாக சித்தரிக்க வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரின் இலங்கை விஜயம் இலங்கை கால்பந்தாட்டத்தில் புதிய மாற்றத்தையும், மிகப்பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என தாம் உறுதியாக நம்புவதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.