Photo: Twitter/ICC
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடுவதற்காக சிம்பாவே சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் மூன்று வீராங்கனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வீராங்கனைகள் மூவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அணியில் உள்ள ஏனைய வீராங்கனைகளுக்கும். பயிற்சியாளர் குழாத்துக்கும் மேற்கொள்ப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டியில் A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை நாளை (23) எதிர்த்தாடவுள்ளது.
எவ்வாறாயினும். போட்டிக்கு முன்னதாக இலங்கை மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீராங்கனைகளும் மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் ஐ.சி.சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் நேற்று (21) ஹராரேயில் ஆரம்பமாகியது.