July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே.தீவுகள் முதல் டெஸ்ட்: திமுத் கருணாரத்னவின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

Photo: Sri Lanka Cricket 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான பெதும் நிஸ்ஸங்க – அணித்தலைவர் கருணாரத்ன ஜோடி அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தது. இதில் இருவரும் சத இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பி அரைச்சதம் கடந்து அசத்தினர்.

திமுத் கருணாரத்ன தன்னுடைய 27 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை பூர்த்தி செய்ததுடன், இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 2 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை பதிவு செய்தார்.

எனினும், 56 ஓட்டங்களை எடுத்திருந்த பெதும் நிஸ்ஸங்க, ஷெனென் கேப்ரியல் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் தலா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் 13 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த அவர், அணித்தலைவராக மஹேல ஜயவர்தனவுக்கு பிறகு அதிக சதங்களை குவித்த (4 சதங்கள்) டெஸ்ட் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, காலி மைதானத்தில் 4 ஆவது டெஸ்ட் சதத்தையும், இந்த ஆண்டில் 4 ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்த திமுத் கருணாரத்ன, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 2 ஆவது சதத்தையும் பெற்றுக் கொண்டார்.

மறுபுறத்தில் அவருடன் இணைந்து விளையாடிய தனஞ்சய டி சில்வாவும் அரைச்சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 9 ஆவது அரைச்சதம் இதுவாகும்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி தரப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 132 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 56 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுக்களையும், ஷெனென் கேப்ரியல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.