October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை டெஸ்ட்: தலையில் பந்து தாக்கியதால் மேற்கிந்திய தீவுகள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே, இன்று காலியில் ஆரம்பமாகிய முதல் டெஸ்ட் போட்டியில், தலையில் பந்து தாக்கியதில் உபாதைக்கு உள்ளான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜெரமி சோலோசானோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதில் போட்டியின் 24 ஆவது ஓவருக்காக ரோஸ்டன் சேஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். அந்த ஓவரின் நான்காவது பந்துவீச்சினை திமுத் கருணாரத்ன ஓங்கி அடித்தார்.

அந்தப் பந்து அவருக்கு அருகிலிருந்தவாறு களடுத்தடுப்பில் ஈடுபட்ட 26 வயதுடைய மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரரான ஜெரமி சோலோசானோவின் தலைக் கவசத்தை வேகமாக தாக்கியது.

இதனால் அவர் மைதானத்தில் சுருண்டு வீழ்ந்ததுடன், தொடர்ந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸுக்கு அழைத்துசெல்லப்பட்டு பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே, தேநீர் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை எடுத்துள்ளது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 90 ஓட்டங்களையும், ஓசத பெர்ணான்டோ 3 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.