July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

200 டெஸ்ட் போட்டிகளில் மத்தியஸ்தராக கடமையாற்றி ரஞ்சன் மடுகல்லே சாதனை

Photo: Twitter/ICC

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர் என்ற பெருமையை இலங்கையின் முன்னாள் வீரர் ரஞ்சன் மடுகல்லே பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று (21) ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில், போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றுவதன் மூலமாக டெஸ்ட் அரங்கில் 200 போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய முதல் போட்டி மத்தியஸ்தர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னான் வீரரும், தற்போது ஐ.சி.சி.யின் பிரதான போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்லே, 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் மத்தியஸ்தர் பொறுப்பை ஏற்றார்.

எனவே, சுமார் 28 ஆண்டுகளாக ஐ.சி.சியின் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றி வரும் இவர், 100 மற்றும் 150 டெஸ்ட் போட்டிகளில் மத்தியஸ்தராக கடமையாற்றிய முதல் போட்டி மத்தியஸ்தர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். அந்த இரண்டு மைல்கல்லையும் அவர் மைதானத்துக்கு வெளியே எட்டியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், ஐ.சி.சி.யின் 8 பிரதான உலகக் கிண்ணப் போட்டிகளில் மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ள அவர், 1999, 2003, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப்போட்டியில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1982 முதல் 1988 வரையான 6 ஆறு ஆண்டுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஞ்சன் மடுகல்லே, 2 போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்காக 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 13 போட்டிகளில் தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.

தனது 29 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றிருப்பினும், தனது 62 வயதிலும் தொடர்ந்தும் கிரிக்கெட்டுக்காக சேவையாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும்.

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியானது போட்டி மத்தியஸ்தராக களம் காணும் இவரின் 200 ஆவது டெஸ்ட் போட்டி என்பதுடன், இதுவரை 369 ஒருநாள் போட்டிகளுக்கும், 125 டி-20 போட்டிகளுக்கும் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.