January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கிண்ணம்’: இலங்கையை வீழ்த்தி சம்பியனானது சீசெல்ஸ்

‘பிரதமர் மகிந்த ராஜபக்ஷ’ அழைப்பு கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பெனால்டி உதையில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி சீசெல்ஸ் அணி சம்பியனானது.

நான்கு நாடுகள் பங்குகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நேற்று (19) இரவு நடைபெற்றது.

‘பீபா’ தலைவர் ஜியானி இன்பான்டீனோ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இப்போட்டியில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து தொடரொன்றின் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய இலங்கை அணி, தென் அமெரிக்க நாடான சீசெல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் சந்தித்தது.

போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் மெர்வின் ஹெமில்டன் இலங்கை அணிக்காக முதல் கோலைப் போட்டு முன்னிலைப்படுத்த, முதல்பாதி ஆட்டம் நிறைவடைய ஒரு நிமிடத்துக்கு முன் இம்மானுவெல் ஜோன் சீசெல்ஸ் அணிக்கான முதல் கோலைப் போட முதல்பாதி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகில் இலங்கைக்கான 2ஆவது கோலைப் போட்டு அமர்க்களப்படுத்தினார்.

இந்த நிலையில், போட்டியின் 75ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த பெனால்டி உதையை வசீம் ராஸிக் கோலாக மாற்ற இலங்கை அணி 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

எனினும், போட்டியின் 85 மற்றும் உபாதையீடு நேரத்தில் சீசெல்ஸ் அணி அடுத்தடுத்து 2 கோல்களைப் பெற்றுக்கொள்ள போட்டி 3க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

எனவே, போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி உதை வழங்கப்பட்டது.

இதன்போது இலங்கை அணிக்காக கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மட்டுமே கோலை அடித்தார். அவர் சீசெல்ஸ் அணியின் முதல் பெனால்டி உதையையும் தடுத்தார். மறுமுனையில் சீசெல்ஸ் வீரர்கள் முதல் உதை தவிர்ந்த அடுத்த மூன்று உதைகளையும் தொடர்ந்து கோலாக்கியமையினால் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகினர்.

இந்தத் தோல்வியின் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து தொடரொன்றில் சம்பியனாகும் வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது.

இந்தத் தொடரில் ஏழு கோல்களைப் பதிவுசெய்த இலங்கை வீரர் வசீம் ராஸிக் தங்கக் காலணி விருதைப் பெற்றுக்கொள்ள, தங்ப் பந்து விருது இலங்கை அணித்தலைவர் சுஜான் பெரேராவுக்கு வழங்கப்பட்டது.