November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2025 சம்பியன்ஸ் கிண்ணம்: பாகிஸ்தான் செல்வதை புறக்கணிக்குமா இந்தியா?

2025 இல் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

2024 முதல் 2031 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டி விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் வெளியிட்டு இருந்தது.

இதில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசியின் போட்டித் தொடரொன்று பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

கடைசியாக, 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்ப்பாட்டு வந்த நிலையில், இந்திய அணி, பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும் என இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

“கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

2025 இல் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் போது, பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.

அத்துடன், இந்திய அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்” என அவர் கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டித் தொடர் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.