July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாலியல் சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் இராஜினாமா

Photo: Twitter/ Cricket Australia 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, பந்தை சேதப்படுத்திய புகாரில் ஸ்டீவன் ஸ்மித், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு டிம் பெய்னிடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் பதவியேற்று மூன்றாவது மாதத்தில், ‘டிம் பெய்ன் எனக்கு பாலியல் ரீதியான ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பினார்’ எனக்கூறி பெண் ஒருவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு புகார் அனுப்பியிருந்தார்.

அதன்பிறகு டிம் பெய்ன் மீது குற்றமில்லை என அறிவித்து, அவர் தலைவர் பதவியில் தொடர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, இன்று இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் டிம் பெய்ன் தனது இராஜினாமாவை உறுதிபடுத்தியுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர், அவுஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை இன்று அறிவிக்கிறேன். இது கடினமான முடிவு, ஆனால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் சரியான முடிவு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அப்போதைய சக ஊழியருடன் உரை பரிமாற்றத்தில் ஈடுபட்டேன்.

அந்த நேரத்தில், குறித்த உரை பரிமாற்றம் ஒரு முழுமையான அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒருமைப்பாடு பிரிவு விசாரணைக்கு உட்பட்டது, அதில் நான் முழுமையாக பங்கேற்றேன் மற்றும் வெளிப்படையாக பங்கேற்றேன்.

இந்த சம்பவம் பொது வெளியில் பெரிய பேசுப்பொருளாகும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன். எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் மற்ற தரப்பினருக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன்.

இதனால், நமது (அவுஸ்திரேலிய) அணியின் நற்பெயருக்கு ஏதேனும் கலங்கம் ஏற்பட்டால் வருந்துகிறேன். உடனடியாக தலைவர் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு என நான் நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன்னால், பெரிய சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான தனது இராஜினாமாவை டிம் பெய்ன் கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டிம் பெய்ன் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த நிலையில் அடுத்ததாக, வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக துணைத் தலைவராக இருக்கும் கம்மின்ஸ் தலைவர் பதவியில் அமர்த்தப்படலாம். 65 ஆண்டுகால அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.