July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அபிவிருத்தி மகளிர் கிரிக்கெட் அணியில் யாழ். வீராங்கனைகள் இருவர்

Photo: Facebook/ Northern Province Cricket Association

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களை மையமாக கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியில், நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட திறமை தேடுதல் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 120 பேரிலிருந்து 20 வீராங்கனைகள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை மாவட்டரீதியாக ஒழுங்கு செய்து வைத்திருந்த அணிகளிலும் இருந்தும் இந்த வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீராங்கனைகள் குழாத்தில் வட, கிழக்கு வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த வகையில், யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனையான சனு பாஸ்கரன் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் மதுரிக்கா முரளிதாசன் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் மகளிர் அபிவிருத்தி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் இருந்து லங்கா திலினி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம், தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகள் இலங்கை கிரிக்கெட் சபையினுடைய மாவட்ட, மாகாண பயிற்சியாளர்கள் வழங்கும் மூன்று மாதகாலம் கொண்ட பயிற்சி முகாமில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி முகாமின் போது வீராங்கனைகளின் திறமை, உடற்தகுதி விருத்தி போன்ற விடயங்கள் மேம்படுத்தப்படுவதில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் பயிற்றுவிப்பு காலத்தின் போது தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் ஊக்குவிப்புத் தொகையொன்றும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பயிற்சி முகாம் நிறைவடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மகளிர் வீராங்கனைகளுக்காக ஒழுங்கு செய்யும் கிரிக்கெட் தொடர்களில் பங்கெடுக்க இந்த அபிவிருத்தி அணியில் இருக்கும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.