July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி விலகுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை மிக்கி ஆர்தர் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டதுடன், தனது இரண்டு ஆண்டு பயிற்றுவிப்புக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இதுதொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டிருந்த மிக்கி ஆர்தர், மேற்கிந்திய தீவுகள் தொடருடன் இலங்கை அணியுடனான பயணம் முடிவடைவது கவலையளிக்கிறது. இந்த மிகச்சிறந்த நாட்டில் பயிற்சியளித்த ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்புகிறேன்.

வீரர்கள் மற்றும் மக்களுக்கு எனது மிகப்பெரிய நன்றிகள். நான் வருகைத்தந்த ஆரம்பத்தைவிட, இப்போது இலங்கை கிரிக்கெட் சிறந்த இடத்தில் இருக்கின்றது என்பதை அறிகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மிக்கி ஆர்தரின் 16 வருட பயிற்றுவிப்பு காலத்தில், நான்காவது தடவையாக இலங்கைக்கு பயிற்சியளித்திருந்தார். தொழில்முறை கிரிக்கெட் வீரராக செயற்பட்டதையும் விட, பயிற்றுவிப்பாளராக அதிக காலத்தை செலவிட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

மிக்கி ஆர்தர் கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் இலங்கை அணியுடன் இணைந்தார். அவரது பயிற்றுவிப்பு காலத்தில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 25 டி-20 போட்டிகளில் 8 வெற்றிகள், 18 ஒருநாள் போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றிருக்கிறது.

இதேவேளை, மிக்கி ஆர்தர் 2022 முதல் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் இங்கிலாந்தின் டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.