July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுடனான டி-20 தொடர்: நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் விலகல்

Photo: Twitter/ICC

இந்திய அணிக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவந்த டி-20 உலகக் கிண்ணத் தொடர் கடந்த 14 ஆம் திகதி நிறைவடைந்தது.

இதில் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று இந்தியாவை வந்தடைந்தது. டி-20 உலக கிண்ணத் தொடரில் ஏற்கனவே கொவிட்-19 கட்டுப்பாட்டு வலயத்தில் வீரர்கள் இருந்தமையினால் அவர்கள் தனி விமானம் மூலமாக இந்தியாவின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனிடையே, இந்திய அணிக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

கான்பூரில் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பாகும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

இதன்படி இன்று (17) ஆரம்பமாகும் டி-20 தொடரின் முதல் போட்டியில் டிம் சௌதி நியூசிலாந்து அணியின் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டி-20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விராத் கோலி விலகியதை அடுத்து இந்திய டி-20 அணியின் தலைவராக ரோகித் சர்மா முதல் முறையாக செயல்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.