Photo: Facebook/ Football Sri Lanka
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு கிண்ண கால்பந்து தொடரின் இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அத்துடன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கால்பந்து அணி, சர்வதேசப் போட்டியொன்றில் வெற்றியீட்டியதுடன், 15 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து தொடரொன்றில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி சாதனை படைத்தது.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் ஆகரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் போட்டியின் 25ஆவது நிமிடத்தில் வசீம் ராஸிக் இலங்கைக்கான முதல் கோலைப் போட்டு அமர்க்களப்படுத்தினர்.
மறுபுறத்தில் பங்களாதேஷ் அணி கோலடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் 1க்கு 0 இலங்கை அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆரம்பமாகியது முதல் பங்களாதேஷ் வீரர்கள் இலங்கை கோல் எல்லையில் கோலுக்கான அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். எனினும், அவை அனைத்தும் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர் சுஜான் பெரேராவினால் தடுக்கப்பட்டன.
எனினும், போட்டியின் 71ஆவது நிமிடத்தில் ஜுவெல் ரனா பங்களாதேஷ் அணிக்கான முதல் கோலைப் போட்டு சமப்படுத்தினார்.
எனினும், போட்டியின் 90ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர்கள் எதிரனியின் கோல் எல்லைக்குள் செலுத்திய பந்து பங்களாதேஷ் வீரரின் கையில் பட்டமையினால் இலங்கைக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை வசீம் ராஸீக் கோலாக்கி, இலங்கை அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியடையச் செய்தார்.
எனவே, தொடரின் லீக் போட்டிகள் நிறைவில் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியை சந்தித்த இலங்கை அணி 4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இலங்கை அணி இறுதியாக 2006இல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கத் தெரிவாகியதுடன், அதில் பாகிஸ்தானிடம் 1க்கு என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணியும் இலங்கையைப் போன்ற முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றாலும், இலங்கையுடன் தோல்வியை சந்தித்தமையினால், போட்டித் தொடரின் விதிமுறைகளுக்கு அமைய தொடரில் இருந்து வெளியேறியது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கை வீரர் வசீம் ராஸிக்குக்கு வழங்கப்பட்டது.
எனவே, எதிர்வரும் 19ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணி, சீசெல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.