July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

14 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் டி-20 உலகக் கிண்ணம்

Photo: Twitter/ICC

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

2021 டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு அடுத்ததாக 2022 டி-20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவிலும், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவிலும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், 2024 முதல் 2031 வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணம், டி-20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட தொடர்கள் நடைபெறவுள்ள நாடுகள் குறித்த விபரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இதில் 2024- 31 வரையான காலப்பகுதியில் 2 ஒருநாள் உலகக் கிண்ணம், 4 டி-20 உலகக் கிண்ணம், 2 சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட போட்டித் தொடர் நடைபெறவுள்ளன.

அதன்படி 2026 டி-20 உலகக் கிண்ணம், 2029 சம்பியன்ஸ் கிண்ணம், 2031 ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.

இதில் 2026 உலகக் கிண்ணத்தை .இலங்கையுடன் இணைந்து இந்தியா நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் ஐ.சி.சியின் உலகக் கிண்ணத் தொடரொன்று நடைபெறவுள்ளது. இதற்கு முன் 2012 இல் இலங்கையில் டி-20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியனாக தெரிவாகியது.

இது இவ்வாறிருக்க, 2025 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேசமயம் அமெரிக்காவும் நமீபியாவும் முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஐ.சி.சி உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்கள்: 2024 – 2031

2024 டி-20 உலகக் கிண்ணம்: அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள்

2025 சம்பியன்ஸ் கிண்ணம்: பாகிஸ்தான்

2026 டி-20 உலகக் கிண்ணம்: இந்தியா, இலங்கை

2027 ஒருநாள் உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

2028 டி-20 உலகக் கிண்ணம்: அவுஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 சம்பியன்ஸ் கிண்ணம்: இந்தியா

2030 டி-20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து

2031 ஒருநாள் உலகக் கிண்ணம்: இந்தியா, பங்களாதேஷ்