(Photo: Rohith Sharma/Facebook)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 20-20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்படாத போதிலும் இந்திய அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பெயரிடப்படவில்லை. கால் தசையில் ஏற்பட்டுள்ள உபாதைக் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் சர்வதேச 20-20 தொடரில் லோகேஷ் ராகுல் உபதலைவராக செயற்படவுள்ளார். ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒருநாள், சர்வதேச 20-20, டெஸ்ட் ஆகிய மூன்று வகை கிரிக்கெட் தொடர்களுக்கும் விராத் கோஹ்லியே அணித் தலைவராக நீடிக்கிறார்.
20-20 தொடருக்கான இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், மயன்க் அகர்வால், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.