July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பாபர் அசாம் தலைமையிலான ஐ.சி.சி அணி அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய 11 வீரர்களைக் கொண்ட டி-20 உலகக் கிண்ண பெறுமதிமிக்க அணியினை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா, இரண்டாவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, அரை இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் அவுஸ்திரேலிய வீரர்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர். பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளில் இருந்து தலா 2 வீரர்களும் நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு வீரரும் இடம்பெற்றுள்ளனர்.

டி-20 உலகக் கிண்ண சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இருந்து, போட்டியின் ஆட்டநாயகனான டேவிட் வோர்னர், சுழல்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டி-20 உலகக் கிண்ணத் தொடரின் பெறுமதிமிக்க அணியின் விக்கெட் காப்பாளராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரும், அணித்தலைவராக பாகிஸ்தானின் பாபர் அசாமும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜோஸ் பட்லர் தவிர இங்கிலாந்தினைச் சேர்ந்த மொயின் அலியும் இந்த அணியில் சகலதுறைவீரராக இடம்பெற்றிருக்கின்றார்.

அத்துடன், இந்த அணியில் இலங்கை சார்பில் வனிந்து ஹஸரங்க மற்றும் சரித் அசலங்க ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

வனிந்து ஹஸரங்க நடைபெற்று முடிந்த டி-20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை (16) கைப்பற்றிய வீரராக சாதனை புரிந்திருந்ததோடு, சரித் அசலங்க இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் (231) குவித்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேசமயம் நியூசிலாந்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி 12ஆவது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, இந்த பெறுமதிமிக்க அணியில் எந்தவொரு இந்திய வீரரும் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.