
Photo: Twitter/ICC
நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச், முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
மார்டின் கப்டில் 35 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்த நிலையில், கேன் வில்லியம்ஸன் முழுமையாக நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை தாங்கிப்பிடிக்க, அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணியின் சார்பில், ஜோஷ் ஹெஷல்வூட் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சார்பாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், தலைவருமான ஆரோன் பின்ச் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தாலும், மிச்சல் மார்ஷ் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அபார அரைச் சதங்களை பதிவு செய்தனர்.
குறிப்பாக, கேன் வில்லியம்ஸன் டி-20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், பெற்றுக்கொண்ட வேகமான அரைச்சதத்தை முறியடித்து, 31 பந்துகளில் மிச்சல் மார்ஷ் அரைச்சதம் கடந்ததுடன், 50 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதற்கு அடுத்தபடியாக டேவிட் வோர்னர் 38 பந்துகளில் 53 ஓட்டங்களையும், இறுதியாக கிளேன் மெக்ஸ்வேல் தனக்கே உரித்தான பாணியில், 18 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, இலகுவாக வெற்றியிலக்கை அடைந்ததுடன், முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
இதேவேளை, கடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை தவறவிட்ட நியூசிலாந்து அணி, தற்போது, டி-20 உலகக் கிண்ணத்தையும் தவறவிட்டது. அவுஸ்திரேலிய அணி, 2009ம் ஆண்டுக்கு பின்னர், டி-20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றதுடன், சம்பியனாகவும் மகுடம் சூடிக்கொண்டது.