Photo: Twitter/BCCI
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, விரைவில் ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகி விடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே விராட் கோலி டி-20 தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து விட்டார்.
மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான், நியுசிலாந்து அணிகளிடம் ஏற்பட்ட தோல்வி கோலியின் தலைமைத்துவம் மீது பெரிய கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில், விராத் கோலி விரைவில் ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் விராட் கோலியின் தலைமைத்துவம் பற்றி கருத்து தெரிவிக்கையில்,
விராட் கோலி தலைமையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதன்மை அணியாக இருந்தது. ஆதலால், கோலி தொடர்ந்து எதிர்காலத்தில் தனது துடுப்பாட்டத்திலும், டெஸ்ட் போட்டி தலைமைத்துவத்திலும் மட்டும் கவனம் செலுத்தக் கூடும்.
அவ்வாறு அவர் முடிவெடுத்தால் விரைவில் ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகலாம். இது உடனடியாக நடக்குமா என எனக்கு தெரியாது. எதிர்காலத்தில் கூட நடக்கலாம். கோலி தனது மனது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம்.
கோலி தலைவர் பதவியிலிருந்து விலகும் முதல் வீரர் அல்ல. இதற்கு முன் பல ஜாம்பவான்கள் தலைவர் பதவியிலிருந்து விலகி துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி இருந்தார்கள். ஆதலால், ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து கோலி விலகுவதில் தவறில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக பதவியேற்ற விராட் கோலி, 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும், அவரது தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி.யின் எந்தவொரு சம்பியன் பட்டத்தையும் வெல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.