November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: முதல் சம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Photo: Twitter/ICC

துபாயில்ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெறும் ஐ.சி.சியின் 7 ஆவது டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. 16 அணிகள் பங்குகொண்ட இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஆரோன் பின்ஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை டி-20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. இதனால் முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லப்போவது அவுஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணி 2 ஆவது முறையாக டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்பு 2010 இல் இங்கிலாந்திடம் தோற்று சம்பியனாகும் வாய்ப்பை இழந்தது.

எனவே, ஐந்து தடவைகள் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய அணி இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துடனான போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. அந்த அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

அந்த அணியின் துடுப்பாட்ட வரிசையை எடுத்துக் கொண்டால் டேவிட் வோர்னர் சிறந்த போர்மில் உள்ளார். அவர் 2 அரைச்சதத்துடன் 236 ஓட்டங்களை எடுத்துள்ளார். மிட்செல் மார்ஷ், மெத்யூ வேட், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற அதிரடி வீரர்களும் இருக்கிறார்கள். பந்து வீச்சில் ஆடம் சம்பா (12 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (9), ஜோஸ் ஹசில்வுட் (8) தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள்.

இதேவேளை, நியூசிலாந்து அணி முதல் முறையாக டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

2015 இல் ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அந்த அணி அவுஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதற்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பதிலடி கொடுத்து முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.

அவுஸ்திரேலியாவை  போலவே நியூசிலாந்தும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்து அணியிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். மிட்செல் டார்லி, மார்டின் கப்டில், அணித்தலைவர் கேன் வில்லியம்சன், ஜிம்மி நீஸம் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையிலும், ட்ரெண்ட் போல்ட் (11 விக்கெட்), இஷ் சோதி (9) டிம் சௌதி (8) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையிலும் உள்ளனர்.

எனவே, இரண்டு அணிகளும் சம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் நடைபெறவுள்ள இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.