January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நானும் கிரிக்கெட் களத்தில் ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன்’: இம்ரான் கான்

இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியதற்காக தலைநிமிர்ந்து நடப்போம் என்று பிரதமர் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியுறாத அணியாக வலம்வந்த பாகிஸ்தான் அணி, 2ஆவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி, சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

“பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் அணிக்கு இப்போது நீங்கள் என்ன உணர்வீர்கள், என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. கிரிக்கெட் களத்தில் இதேபோன்ற ஏமாற்றங்களை நானும் சந்தித்திருக்கின்றேன்.

ஆனால் நீங்கள் ஆடிய தரமான கிரிக்கெட்டை எண்ணி பெருமைப்படுங்கள். வெற்றி பெறும்போது நீங்கள் காட்டிய தன்னடக்கத்தை நினைத்துப் பெருமைப்படுங்கள். அவுஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள்”

என்று இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் பிறகு கிரிக்கெட் உலகின் முன்னாள் வீரர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘மெத்யூ வேடிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ். போட்டிகளை வெற்றிபெற வைப்பது பிடியெடுப்பு தான். பிடியெடுப்பை விட்டால் அதற்கான பெரிய விலையை சில சமயத்தில் கொடுக்க வேண்டிவரும். துரதிஷ்டம்தான், பாகிஸ்தான் தொடரில் பிரமாதமாக ஆடி வந்தனர். அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, ‘பாகிஸ்தான் சில நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அவுஸ்திரேலியா அணி கடைசி 5 ஓவர்களில் வலுவாக மீண்டெழுந்தனர். ஆட்டத்தை வலுவாக முடித்தனர். ஸ்டொய்னிஸ் இன்னிங்ஸ் அவர்களுக்கு வெற்றி நம்பிக்கையை பெற்றுத் தந்தது என்றால், மெத்யூ வேட் அதனை வெற்றியாகவே மாற்றி இறுதிக்கு அவுஸ்திரேலியாவை இட்டுச் சென்றார்’, என்றார்.