நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி எதிர்வரும் 14 ஆம் திகதி இறுதிப் போட்டியில் ஆடிய கையோடு, துபாயிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவில் 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
எதிர்வரும் 17, 19, 21 ஆகிய திகதிகளில் 3 டி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.அதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டியும், டிசம்பர் 3 ஆம் திகதி மும்பையில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது
இதனிடையே, நியூசிலாந்துடனான டி-20 தொடருக்கான இந்திய அணி கடந்த 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டி-20 அணியின் புதிய தலைவராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நியூசிலாந்துடன் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடிவரும் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் ஷமி, ரிஷப் பாண்ட், ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி முதல் போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக அஜிங்கியா ரஹானே செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, நியூசிலாந்து தொடரில் சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல, ரிஷப் பாண்ட் அணியில் இடம்பெறாததால் விக்கெட் காப்பாளராக கே.எஸ். பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால் பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது
இந்திய அணி- அஜிங்கியா ரஹானே (தலைவர்), சேத்தேஸ்வர் புஜாரா (உப தலைவர்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சாஹா, கே.எஸ். பரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜெய்ந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா.