July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி மொஹமட் ரிஸ்வான், பகர் ஸமான் ஆகியோரது அதிரடியான அரைச்சதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது.

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் 67 ஓட்டங்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பகர் ஸமான் 55 ஓட்டங்களையும் குவித்தனர். அவுஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னர் – மிட்செல் மார்ஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்த ஜோடி 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் 5 ஓட்டங்களுடனும், கிளென் மெக்ஸ்வெல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வோர்னர் 49 ஓட்டங்களில் வெளியேறினார்.

எனவே, அவுஸ்திரேலிய அணி 96 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். மெதிவ் வேட் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ஓட்டங்களை விரைவாக கடந்தது.

இறுதியில், அவுஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஸ்டோய்னிஸ் 40 ஓட்டங்களுடனும், மெதிவ் வேட் 41 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி, டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அவுஸ்திரேலிய அணி, எதிர்வரும் 14ஆம் திகதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.