
Photo: Facebook/ Mirwais Ashraf
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மிர்வாஸ் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் மொஹமட் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும் அந்த அணியால் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பைத் தக்கவைக்க முடியவில்லை.
இதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த அஸீஸுல்லாஹ் பாசில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவராக முன்னாள் வீரர் மிர்வாஸ் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தலிபான் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக மிர்வாஸ் அஷ்ரப்பை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் பிரதமர் நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.