January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – நியூசிலாந்து டி-20 தொடர்: தடுப்பூசி செலுத்திய ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரை நேரில் பார்வையிட தடுப்பூசிகளைப் செலுத்தியவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி-20 போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, போட்டியினை மைதானத்தில் பார்வையிடுவதற்கு செல்லும் ரசிகர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தடுப்பூசியினையாவது செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் போட்டியைக் காண வரும்போது 48 மணிநேரத்துக்கு முன் பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த சான்று வைத்திருக்க வேண்டும். ரசிகர்கள் வரும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கைவசம் சானிடைசர் கொண்டுவர வேண்டும்.

அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ப்பூரில் சர்வதேசப் போட்டியொன்று நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.