July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் புறக்கணிப்பு

இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடி வருகின்ற அஞ்சலோ மெத்யூஸ், குசல் பெரேரா உள்ளிட்ட 12 வீரர்கள் எந்தவொரு அணிகளாலும் வாங்கப்படாமை முக்கிய பேசுபொருளாக மாறிவிட்டது.

இரண்டாவது எல்.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் (09) இரவு இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் மேற்பார்வையின் கீழ் தொலைக் காணொளி ஊடாக இம்முறை வீரர்கள் ஏலம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு தென்னாபிரிக்காவின் பாப் டு பிளெசிஸ், கண்டி வோரியர்ஸ் அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் ரோவ்மென் பொவெல், காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிக்கு தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோர் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட குசல் பெரேரா மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய மினோத் பாணுக, தனன்ஜய டி சில்வா போன்ற முக்கிய வீரர்கள் இம்முறை ஏலத்தில் எந்தவொரு அணிகளாலும் வாங்கப்படவில்லை.

அதேபோல, இலங்கை அணிக்காக விளையாடி வருகின்ற அகில தனன்ஜய, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன், ஷிரான் பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம மற்றும் இளம் சுழல்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம ஆகிய வீரர்களும் இந்த ஆண்டு ஏலத்தில் புறக்கணிப்பட்டுள்ளார்கள்.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் பல முன்னாள் வீரர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், குறித்த வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு அனைத்து அணிகளுடனும் இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.