July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்கு தள்ளிய ராகுல்!

Photo: Twitter/BCCI

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள டி- 20 தரவரிசைப் பட்டியலில் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி- 20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடாத கே.எல். ராகுல், நமீபியா, ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக அரைச்சதம் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை டி-20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 727 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு கே.எல். ராகுல் முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைச்சதம் அடித்த விராட் கோலி, அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் பிரகாசிக்க தவறியதால், 698 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் முதலிடத்திலும், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் வனிந்து ஹஸரங்கவும், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.