
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்தாண்டு டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களினால் குறித்த தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும் நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அதே காரணத்தை முன்வைத்து டி-20 தொடரை ரத்து செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட குறித்த தொடரானது அடுத்த ஆண்டு செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடராக நடத்துவதற்கு தீர்மானிக்கட்டது.
இதனிடையே, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடரந்து குறித்த தொடரில் மேலதிகமாக 2 டி20 போட்டிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரு அணிகளுக்குமிடையில் ஏழு டி-20 போட்டிகள் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.