July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக டி- 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜொனி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

இருவரும் அணிக்கு நிதானமான ஆரம்பத்தை கொடுத்தனர். 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அடெம் மில்னே பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் மலான் களமிறங்கினார். மறுபுறம் பட்லர் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இஷ் சோதி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து, களமிறங்கிய மொயின் அலி, டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ஓட்டங்களை எடுத்தார்.

இதன்படி இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிசார்பாக, கேன் வில்லியம்ஸன் மற்றும் மார்டின் கப்டில் ஆகிய அனுப துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தில் ஆட்டமிழந்தாலும், டெவோன் கென்வோ, டார்லி மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அணியை மிகச்சிறந்த வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

ஒரு கட்டத்தில் டெவோன் கொன்வே 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக, 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை நியூசிலாந்து அணி பெற்றிருந்ததுடன், 38 பந்துகளில் 70 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எனினும், அதன் பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டார்லி மிச்சலுடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.

இதில், ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, நியூசிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்தது. எனினும், டார்லி மிச்சல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 47 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, 19 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி வெற்றியிலக்கை அடைந்தது.