Photo: Facebook/ Sri Lanka Football
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் வசீம் ராஸீக் போட்ட 4 கோல்களின் உதவியுடன் மாலைதீவுகளுடனான போட்டியை 4 – 4 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.
இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு கிண்ண கால்பந்து தொடர் நேற்று (09) குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் மாலைதீவுகள் அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இலங்கை அணியின் பின்கள மற்றும் மத்தியகள வீரர்கள் விட்ட தவறுகளால் மாலைதீவுகள் அணி 3 கோல்களைப் போட்டு முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் திறமையை வெளிப்படுத்த இலங்கை முயற்சித்தது. எனினும் மாலைதீவுகளின் அலி அஷ்பக் தனி ஒருவராக பந்தை நகர்த்திச் சென்று 4 ஆவது கோலைப் போட்டு இலங்கை அணியை பிரமிப்பில் ஆழ்த்தினார்.
அதன் பின்னர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் விளையாடிய இலங்கை அணி 64 ஆவது நிமிடத்தில் மார்வன் ஹெமில்டன், டிலொன் டி சில்வா ஆகியோரின் பந்து பரிமாற்றங்களின் உதவியுடன் வசீம் ராஸீக் மூலம் முதலாவது கோலைப் போட்டது.
நான்கு நிமிடங்கள் கழித்து மீண்டும் டிலொன் டி சில்வா பரிமாறிய பந்தை ராஸீக் கோலாக்க இலங்கை அணி உற்சாகத்தில் மிதந்தது.
அதன் பின்னர் அபாரமாக விளையாடிய இலங்கை அணி 72 ஆவது நிமிடத்தில் வசீம் ராஸீக் மூலம் 3 ஆவது கோலைப் போட்டது.
உபாதையீடு நேரத்தின்போது மேலும் ஒரு கோலைப் போட்ட ராஸீக் தனது கோல் எண்ணிக்கையையும் இலங்கையின் கோல் எண்ணிக்கையையும் 4 ஆக உயர்த்தினார்.
இறுதியில் போட்டி 4 – 4 என கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிந்தது.