July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றியுடன் டி-20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இந்தியா

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டி இன்று (08) நடைபெற்றது. இதில் இந்தியா – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணி அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – கே.எல். ராகுல் இணை அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைச்சதம் கடந்து அசத்தினர்.

அதன்பின் 52 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் 15.2 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இருப்பினும், இந்திய அணி நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.