January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலிபான்கள் விவகாரம்: ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியை ஒத்திவைத்தது ஆஸி.

Photo: Twitter/ Afghanistan Cricket 

அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இந்த மாதம் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு தீர்வொன்று கிடைக்கும் வரை இந்தப் போட்டி நடைபெறாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் 27ஆம் திகதி ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

முன்னதாக இந்தப் போட்டியானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்பேட்டியைக் காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தற்போது இந்தப் போட்டியை அவுஸ்திரேலியா ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. தலிபான்களே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை முழு அதிகாரமும் தற்போது தலிபான்கள் வசம் போய் விட்டது. இதில் விளையாட்டுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே தலிபான்கள் கூறிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் கிரிக்கெட் அணியை தடைசெய்யப் போவதாக தகவல் வெளியாகி இருந்தன.

இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா ஒத்திவைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தம் இல்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஹோபர்ட் டெஸ்ட் போட்டியை ஒத்திவைத்துள்ளோம்” என்றார்.

ஆப்கானிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.