photo: Twitter/ICC
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ள கிறிஸ் கெய்ல், தான் இன்னொரு டி-20 உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாட விருப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 45 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தடுமாறியிருந்தார்.
கிறிஸ் கெய்லின் மோசமான ஆட்டமும் மேற்கிந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாக துடுப்பு மட்டையை உயர்த்தி காட்டியபடி சென்றார்.
எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சக வீரர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தி கட்டித்தழுவி வரவேற்றனர். இவற்றை பார்க்கும் போது கிறிஸ் கெய்ல் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கருதப்பட்டது.
ஆனால் போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த கிறிஸ் கெய்ல், தான் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் மேலும் ஒரு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் இது மிகவும் ஏமாற்றமளிக்கும் உலகக் கிண்ணத் தொடர். நான் இன்னும் ஒரு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விரும்புகிறேன். ஆனால் எனக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். எனினும்,ஜமைக்காவில் உள்ள எனது சொந்த மக்கள் முன்னால் ஒரு பிரியாவிடை போட்டியில் விளையாட விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்ட கிறிஸ் கெய்ல், 2019ஆம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட்டார். எனினும், டி-20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.