Photo: Twitter/ICC
ஸ்கொட்லாந்துக்கு எதிரான டி–20 உலகக் கிண்ண சுப்பர்–12 போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 41 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம், சொஹைப் மலிக்கின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அணித்தலைவர் பாபர் ஆசாம் 66 ஓட்டங்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சொஹைப் மலிக் 54 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் நின்று விளையாடி 34 பந்துகளில் அரைச்சதம் கடந்து அசத்தினார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ஸ்கொட்லாந்து அணியால் 117 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்படி, துபாயில், நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.