January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கிண்ணம்’: கால்பந்து தொடர் ஆரம்பம்

Photo: Sri Lanka Football 

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கும் ‘பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ’ அழைப்பு கிண்ண கால்பந்து தொடர் நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சர்வதேச கால்பந்து போட்டித் தொடரொன்று நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெறும் கால்பந்து தொடரில் இலங்கை, பங்களாதேஷ், சீசெல்ஸ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.

இப்போட்டித் தொடரில் சம்பியனாகும் அணிக்கு 5000 அமெரிக்க டொலர் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

லீக் சுற்றின் அடிப்படையில் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிடும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெறும் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

லீக் போட்டிகள் நவம்பர் மாதத்தின் 8ஆம், 11ஆம், 14ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 19ஆம் திகதியன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடரின் சகல போட்டிகளும் கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டு வலய முறையில் ஈடுபடுத்தப்பட்டு இப்போட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களுக்கு மாத்திரம் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்படும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் மாலைதீவுகளில் நடைபெற்று முடிந்த 13ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றிருந்த அதே இலங்கை கால்பந்து குழாமை களமிறக்குவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.