July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியது இந்தியா

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான சுப்பர் 12 சுற்று லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் இந்தியா – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோரது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 17.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதில் இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 86 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் – ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆரம்பத்தை கொடுத்தது.

இதில் 30 ஓட்டங்களுடன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த கே.எல். ராகுல் அரைச்சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், ஆப்கானிஸ்தான் அணியை பின்தள்ளி புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி இப்போட்டியில் 6.3 ஓவர்களில் வென்றதன் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் +1.619 ஓட்ட வித்தியாச விகிதத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இதே வெற்றிகளுடன் +1.481 ஓட்ட வித்தியாச விகிதத்தில் இருக்கிறது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, இந்தியா நமீபியாவை வீழ்த்தினால் அரையிறுதிக்குள் சுலபமாக நுழைந்து விடலாம்.

இதனால், நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணி 3 வெற்றிகளுடன் 1.277 நெட் ஓட்ட வித்தியாச விகிதத்தை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.