July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Photo: Twitter/West Indies

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் குழு 1 இல் நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றுள்ளதுடன், அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றியீட்டி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

இதனிடையே, நாளை (06) நடைபெறவுள்ள தமது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் முன்னணி அனுபவ சகலதுறை வீரரான டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

இலங்கை அணியுடன் நேற்று (04) நடைபெற்ற போட்டிக்குப் பிறகு இடம்பெற்ற நேர்காணலில் வைத்து தனது ஓய்வை பிராவோ உறுதிப்படுத்தினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியில் இடம்பெற்றிருந்த பிராவோ, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் மட்டுமன்றி உலக அளவில் நடைபெற்று வரும் பல டி-20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய வீரராக பங்கேற்று வருகிறார்.

அத்துடன், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து டி-20 லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.